(0044) 190 867 1468
(0044) 208 549 8000
(0044) 788 149 2600

Kingston Health Centre   

31 London Road, Kingston, Surrey,
KT2 6ND, UK.

மனநல பிரச்சினைகள்

சில பிரச்சினைகளுக்காக நாம் மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருப்போம். நமக்குத் தெரிந்த நண்பரிடமோ உடன் பிறந்தவர்களிடமோ அந்தப் பிரச்சினையைச் சொல்லும்போது, `அதை இப்படிச் செய்தால் இந்தப் பிரச்சினையே வராதே’ என்று பளிச்சென்று ஆலோசனை கூறுவதைப் பார்த்திருக்கலாம். உண்மையில் நமக்கும் அந்த விஷயம் தெரிந்த ஒன்றாகவே இருக்கும். ஆனால், அவர்கள் சொன்ன யோசனை நமக்கு ஏன் அதுவரை தோன்றவில்லை என்று அப்போது உறைக்கும். இதைத்தான் மனநல ஆலோசனைத் துறையில் ‘Obvious is always invisible’ என்று கூறுவார்கள்.


அடுத்து நமது கவலையைத் தூண்டுவது, தாங்கள் கூறிய பிரச்சினையை வைத்து நம்மை அவர்கள் எவ்வாறு எடை போடுவார்கள். ஒரு வேளை நாம் கூறியதை அந்த நபர் பிறரிடம் பகிர்ந்துகொண்டால் என்னவாகும் என்ற எண்ணம் மேலோங்க ``ஏண்டா நமது பிரச்சினையைப் போய், பிறரிடம் கூறினோம்’’ என்று வருந்த நேரிடலாம்.


இதற்குப் பதிலாகத் தேர்ச்சி பெற்ற மனநல ஆலோசகர் ஒருவரிடம் தமது பிரச்சினையைக் கூறும்போது, அவர் அதற்கான தீர்வை நோக்குவதைவிட, நீங்கள் எந்தக் கோணத்தில் உங்கள் சூழ்நிலையை அணுகினால், நீங்களே தீர்வை தேடிக்கொள்ள முடியும் என்ற பயிற்சியை உங்களுக்குத் தருவார். இதன் மூலம் உங்களது சூழ்நிலையை நீங்களே சரிசெய்யக் கற்றுக்கொள்ளும்போது, உங்கள் தன்னம்பிக்கை வலுப்படும்.


ஒரு மனநல ஆலோசகர், தான் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கண்ட வழிமுறைக்கு விளக்கம் அளிக்க முடியும். அனுபவங்களை நாம் எவ்வாறு பெறுகிறோம், அதன் விளைவு மற்றும் சாதக, பாதகங்களை நமது கவனத்துக்குக் கொண்டுவருவதில் மனநல ஆலோசகர் ஓர் அகக் கண்ணாடி போல் செயல்படுவார்.


நமது கஷ்டத்தால், இயலாமையால் மனநலத் துறை சார்ந்த வல்லுநர்களை அணுகுகிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையுடன் இந்த விஷயத்தை அணுகாமல், தீர்வுக்கான வழிமுறைகளைக் கற்றுக்கொண்டு நம் வாழ்க்கையைச் சீரமைத்துக்கொள்கிறோம் என்ற பார்வை சுயவளர்ச்சியை ஊக்குவிக்கும்.


என்ன காரணம்?

மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கு இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைமுறை, சிதைந்துபோன உறவுமுறை, மறைந்துபோன கூட்டுக் குடும்ப மகிழ்ச்சி, அதிகரித்துவரும் மதுப் பழக்கம், தன் வேலை, தன் வீடு எனும் குறுகிய மனப்பான்மையின் வளர்ச்சி, இப்படிப் பொதுவான பல காரணங்களைக் கூற முடியும். குறிப்பிட்டுச் சொன்னால், குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிற மனக்காயங்கள், இளவயதினருக்குக் காதல் தோல்வி, வேலையின்மை அல்லது படிப்புக்கு ஏற்ற வேலையில்லாதது போன்றவை காரணமாகின்றன. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிக வேலைப் பளு, குறைந்த சம்பளம், மோசமான பணிச் சூழல் போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. பெண்களுக்கோ தாமதமாகும் திருமணம், குடிகாரக் கணவர், குழந்தையின்மை, அடங்காத பிள்ளைகள் என்று பல பிரச்சினைகள் மன அழுத்தத்தைக் கொண்டுவருகின்றன. முதியவர்கள் தனிமை, வெறுமை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, நாள்பட்ட நோய்நிலை, நலிந்துவரும் உடல் நிலை போன்றவற்றால் மன அழுத்தம் வந்து அவதிப்படுகிறார்கள்.


பொதுவாக, மன அழுத்தம் அதிகமாகும்போது அது உடல்நலனையும் பல வழிகளில் பாதிக்கும். உடல் இளைப்பது, அஜீரணம், இரைப்பைப் புண், ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி, காரணம் தெரியாத உடல் வலி, மனப் பதற்றம், மன பயம், குடல் எரிச்சல் நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, ஆஸ்துமா, தூக்கமின்மை, ஆண்மைக் குறைவு, பாலியல் ஆர்வம் குறைவது போன்ற பல தொல்லைகளுக்கு மன அழுத்தம் வழிவிடும்.


குறுகிய கால மன அழுத்தம் குறித்துப் பயம்கொள்ளத் தேவையில்லை. ஆனால், நாள்பட்ட மன அழுத்தத்தின் விளைவுகள் ஆபத்தானவை. அதிகமுறை மன அழுத்தத்துக்கு ஆளாகிறவர்களை மீண்டும் அமைதிநிலைக்குக் கொண்டுவருவது கடினம் இவர்கள் தனக்குத்தானே பேசிக்கொள்வதும், மற்றவர்களிடமிருந்து விலகியே இருப்பதும், தனிமையை நாடுவதும், குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதும் உண்டு. தன்னைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி, சமூகத்தைப் பற்றி எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவது, வீட்டைவிட்டு ஓடிப்போவது, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது, தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பது போன்றவற்றுக்கு மன அழுத்தம்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது.


பசி குறைவது அல்லது அதிக பசி, அடிக்கடி கோபப்படுவது/எரிச்சல்படுவது, உறக்கம் குறைவது, பேச்சு, செயல்களில் வேகம் குறைவது, எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது, முக்கியமானவற்றில் முடிவெடுக்க முடியாத நிலைமை, தன்னம்பிக்கை இல்லாமல் பேசுவது, பாதுகாப்பற்ற உணர்வு, ஞாபக மறதி, பதற்றமான எண்ணங்கள், மனக் குழப்பம் போன்றவை மன அழுத்த நோயின் முக்கியமான அறிகுறிகள்.


மன அழுத்தத்தை கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்

 • தூக்க தொந்தரவுகள்

 • பசியின்மை

 • குறைவான கவனம், ஞாபகமறதி

 • குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள்

 • கோபம்

 • வன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள்

 • மனவியல்ரீதியான வெளிப்பாடுகள்

 • மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு

 • படபடப்பான நடவடிக்கைகள்

 • குழந்தை பருவ அனுபவங்கள்

 • இறுக்கமான வாழ்க்கை நிகழ்வுகள்

 • உடல் ஆரோக்கிய பிரச்சினைகள்

 • மரபுரிமை பரம்பரை ரீதியான குறைகள்

 • மருந்துகளின் பக்க விளைவுகள்

 • தனிமை

 • தாழ்வு மனப்பான்மை


மனநல பிரச்சினைகளால் ஏற்படும் விளைவுகள்

உடல்ரீதியான விளைவுகள்

பெரும்பாலும் நரம்பு, சுரப்பிகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் தொடர்பாக வெளிப்படுகின்றன. எந்த வகை காரணியால் மன அழுத்தம் ஏற்பட்டாலும், உடல் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அவற்றுள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

 • படபடப்பு, அதிகரிக்கும் இதய துடிப்பு

 • அதிகரிக்கும், மேலோட்டமான மூச்சு வாங்குதல்

 • நடுக்கம்

 • குளிர் அல்லது வேர்த்து வழிதல்

 • ஈரமான புருவப்பகுதி

 • இறுக்கமான தசைகள், வயிற்றுப்பகுதி தசைகள் இறுகுதல், முறுக்கிய கைகள், பற்களை கடித்தல்

 • வயிற்று உபாதைகள்

 • அடிக்கடி சிறுநீர் கழித்தல்

 • முடி கொட்டுதல்


மனவியல்ரீதியான விளைவுகள்

சரியான முறையில் சிகிச்சை பெறாத போது பலவிதங்களில் வெளிப்படுகின்றன. தீர்க்கப்படாத மனவியல் பிரச்சினைகள் மனநிலையையும் பிறகு உடல் நிலையையும் பாதிக்கும்.

 • கவனம் செலுத்துவதில் சிரமம்

 • முடிவெடுப்பதில் சிரமம்

 • தன்னம்பிக்கை இழத்தல்

 • அடக்கமுடியாத ஆசைகள்

 • தேவையற்ற கவலைகள், படபடப்பு

 • அதீத பயம்

 • பயத்தால் பாதிப்புகள்

 • குணாதிசயத்தில் அடிக்கடி மாற்றங்கள்


செயல்பாட்டு விளைவுகள்

பாதிக்கப்பட்ட நபர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதில் வெளீப்படுகின்றன:

 • அதிகமாக புகைபிடித்தல்

 • நரம்பியல் தூண்டல்கள்

 • அதிகமாக மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்துதல்

 • பற்களை கடித்தல், முடிகளை இழுத்தல் போன்ற பழக்கங்கள்

 • ஞாபக மறதி

 • விபத்துக்குள்ளாதல்

 • முரட்டுத்தனமான வன்முறை செயல்களுக்கு தூண்டப்படுதல்


செயல்பாட்டு விளைவுகள் அபாயகரமானவை மற்றும் சமூக, தனிமனித உறவுகளை பாதிக்கக்கூடியவை. தனிமை, வறுமை, சோகம், அழுத்தம், விலக்கி வைக்கப்படுதலால் ஏற்படும் விரக்தி போன்ற விளைவுகள் நீடித்து இருப்பது மட்டுமன்றி, சாதாரண சளி முதல் எய்ட்ஸ் வரையான வைரஸ் தாக்குதல்களுக்கெதிரான நோய் எதிர்ப்புத்திறனையும் குறைக்கின்றன. ஹார்மோன்கள், மூளையில் உள்ள நரம்பு மண்டல கடத்திகள், பிற சிறு அளவிலான இரசாயணங்கள், முக்கிய வினை ஊக்கிகள், உடல் செயல்பாடு ஆகியவற்றை சில வகை மன அழுத்தம் உண்டாக்குகின்றன.


உடலும் மனமும் நலமுடன் இருக்க வேண்டு மானால் ஆரோக்கிய உணவு, போதிய ஓய்வு, நிம்மதியான உறக்கம் ஆகியவை மிகவும் அவசியம். எந்த ஒரு வேலையையும் திட்டமிட்டுச் செய்யவும் சரியான நேரத்தில் முடித்துவிடவும் பழகிக்கொண்டால் மன அழுத்தத்துக்கு இட மில்லாமல் போகும். அலுவலகப் பிரச்சினைகளை வீட்டுக்குக் கொண்டுவருவதை நிறுத்தினாலே பாதிப் பிரச்சினை சரியாகிவிடும். பிடித்த உறவுகளுடனும் தன்னம்பிக்கை மனிதர்களுடனும் பழகும் நேரத்தை அதிகப்படுத்தினால் மனதிலிருக்கும் சுமை குறையும்.


நம்பிக்கை தரும் வாசகங்கள் படிப்பது, பாடல்களைக் கேட்பது என வழக்கப்படுத்திக் கொண்டால், வாழ்க்கையின் மீது பற்று உண்டாகும். உடற்பயிற்சிக்குத் தினமும் அரை மணி நேரம் ஒதுக்கினால் மூளைக்குள் ‘என்டார்பின்’கள் சுரந்து மனசுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கும். நகைச்சுவை உணர்வை அதிகப்படுத்திக்கொள்வதும், தினமும் யோகா/தியானம் மேற்கொள்வதும், வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவதும் மன அமைதிக்கு வழி அமைக்கும்.


மன அழுத்தம் (Depression)


உடலில் நோய்களை உண்டாக்கக்கூடிய அல்லது மனரீதியான பதட்டம், படபடப்பு அளிக்கும் எந்தவொரு மனவியல் காரணிகளை மன அழுத்தம் எனக் கருதலாம்.


மன அழுத்தம் என்பது எல்லோருக்கும் ஏற்படக்கூடியது. இது சாதாரணமானது தான். என்றாலும் ஒவ்வொரு தனிநபருக்கும் இடையில் வேறுபட்ட அளவுகளில் மன அழுத்தம் காணப்படும். என்றாலும் சிலருக்கு மன அழுத்தம் அசாதாராணமாக அதிகரிக்கும்.


இது எளிதில் மாற்றம் அடையக்கூடியது என்றாலும் சரியான முறையில் அதனை கண்டறிந்து மன நல ஆலோசகரை நாடி உரிய தீர்வினைப்பெற்றுக்கொள்ளவேண்டும். இல்லாவிடின் அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.


மன அழுத்தம் ஏற்படுவதன் பின்னணியில், அழுத்தமான ஓர் ஏமாற்றமோ, வலியோ, கவலையோ இருக்கக்கூடும். கால ஓட்டத்தில் இந்த மன அழுத்தம் தாமாகவே சரியாகிவிடும். ஆனால், சில நேரங்களில் மனம் இறுக்கமாக இருக்கும்; இதுதான் காரணம் எனச் சரியாக சுட்டிக்காட்ட முடியாது. சம்பந்தமே இல்லாமல், பழைய விஷயங்களை ஆராய்ந்து, அதுவா இதுவா என்று காரணத்தைத் தேடி குழம்புவார்கள்.  சந்திக்கும் ஒவ்வொரு சூழலும், மேலும் மனதை இறுக்கமாக்கும். இதுதான் மன இறுக்கத்தின் அறிகுறிகள்.


 • லேசான மன அழுத்தம் - உங்கள் தினசரி வாழ்க்கையில் சில தாக்கங்கள் ஏற்படுகின்றன

 • மிதமான மன அழுத்தம் - உங்கள் தினசரி வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது

 • கடுமையான மன அழுத்தம் - அன்றாட வாழ்வினை கொண்டு செல்ல இயலாது; கடுமையான மன அழுத்தம் கொண்ட ஒரு சிலருக்கு மனநோய் அறிகுறிகள் இருக்கலாம்


பதற்றம்

பயமான அல்லது கஷ்டமான சூழ்நிலைகளில் இருக்கும்போது, நாம் எல்லோருமே பதற்றம் (Anxiety) அடைந்திருப்போம். இது இயற்கை. அதே சூழ்நிலைகள் நமக்குப் பழகும்போதோ, மாறும்போதோ அல்லது அதிலிருந்து விலகும்போதோ பதற்றமும், பயமும் நம்மை விட்டுப் போய்விடுகிறது. கஷ்டமான சூழ்நிலையிலிருந்து விலகிய பின்னும் பதற்றம் தொடர்ந்து நீடித்தாலோ, திடீரென காரணமில்லாமல் ஏற்பட்டாலோ அல்லது அதன் வீரியம் அதிகரித்தாலோ, அது அன்றாட வாழ்க்கை முறையில் பெருமளவில் பாதித்து உடல், மனநலக் கேடுகளை விளைவிக்கிறது.


சிலர் எப்போதாவது பதற்றமடைகின்றனர்; சிலர் எடுத்ததற்கெல்லாம் பதற்றமடைகின்றனர். ஆகமொத்தத்தில் இந்த பயம், பதற்றம் ஆகியவை நம்மை கீழே இழுக்கும் சக்திகளாகவே எப்போதும் உள்ளன. பயத்தையும் பதற்றத்தையும் பற்றி மருத்துவ ரீதியாக தெரிந்துகொண்டால், அதனைக் கடப்பது சுலபமாகும் அல்லவா?!


பொதுவாக அதீத பயம் அல்லது அமைதி இன்மையால் பதற்றம் ஏற்படும். பதற்றம் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும், ஆனால் இத்தகைய நிமிடங்கள் நரக வேதனையாகும், இதனை விளக்க வார்த்தைகளை இல்லை. குறுகிய கால அவகாசத்துக்குள் (10 நிமிடங்களுக்குள்) பதற்றத்தின் அறிகுறிகள் பன்மடங்காக உச்சத்தை அடையும். மூச்சடைப்பு, மூச்சுத் திணறல், சாகப் போவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.


கீழ்கண்ட அறிகுறிகளால் இதனை கண்டறியலாம்:

 • அதிகமான இதயத் துடிப்பு

 • வியர்த்து கொட்டுதல்

 • நடுக்கம்

 • மூச்சு விட சிரமம்

 • மாரடைப்பு

 • நெஞ்சு வலி

 • குமட்டல்

 • மயக்கம் அல்லது தலை சுற்றுதல்


இவையாவும் அதீத பயம் மற்றும் அமைதியின்மையால் ஏற்படுவது. இவை சொல்லாமல் கொள்ளாமால் வருவதாகும். ஆனால் பாதி நேரங்களில் ஏதாவது சில நிகழ்வுகளால் ஏற்படும் முன் பதற்றம் ஏற்படும். அதனால் இதனை சமாளிக்க எந்நேரமும் நாம் தயாராக இருக்க வேண்டும்.